ஶ்ரீ கிருஷ்ணவேணீ மாஹாத்மியம்
பி.ஆர்.கண்ணன், நவீ மும்பாய்

(ஶ்ரீகிருஷ்ணவேணி மாஹாத்மியம் என்கிற ஸ்காந்தபுராணப்பகுதி விஜயவாடாவில் தெலுங்கு பாஷையில் கைப்பிரதியாக ஒரு வித்வானிடம் இருந்தது. தற்போது (ஜூலை- செப்டெம்பர் 2016) சாதுர்மாஸ்யத்திற்காக விஜயவாடாவில் முகாம் இருக்கும் காஞ்சி சங்கராசாரிய ஸ்வாமிகளின் முயற்சியினால் அதை அவரிடமிருந்து பெற்று, பின்னர் காஞ்சீபுரம் ஏனாத்தூர் ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விச்வவித்யாலயத்தின் ஸம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர் G. சங்கரநாராயணன் அதை ஸம்ஸ்கிருதத்தில் தேவநாகரி லிபியில் transcribe செய்து ஶ்ரீபெரியவாளிடம் ஸமர்ப்பித்தார். அதிலிருந்து ஶ்ரீபெரியவாளின் ஆக்ஞைப்படி தொகுக்கப்பட்டது இந்த கட்டுரை.)

முன்பு ஒரு சமயம் நாரத பகவான் ரிஷிகளிடம் கலியின் பயங்கர  பிரபாவத்தைப்பற்றிப் பேசுகையில்,  பிரம்மதேவர் ஶ்ரீ மகாவிஷ்ணுவிடம் இதே விஷயத்தை நிவேதனம் செய்ததைச் கூறலானார்: பிரபோ, பயங்கரமான கலியுகம் வரப்போகிறதே, ஜனங்கள் எல்லோரும் கடுமையான பாபங்களைச் செய்வார்களே. எது அவர்களைக் காக்கும். ஶ்ரீவிஷ்ணுவானவர் சொன்னார்: கோரமான கலியில் ஜனங்களைக் காக்கக்கூடியது தீர்த்தங்களே. ஒவ்வொரு கல்பத்திலும்போல, நீ கங்கை போன்ற புண்ணிய நதிகளையும், தீர்த்தங்களையும் ஶ்ருஷ்டி செய்வாயாக. நான் என் சரீரத்திலிருந்தே கிருஷ்ணா நதியை உண்டுபண்ணுகிறேன்.
तस्याः संस्मरणस्पर्शपानस्नानस्तवादिभिः।
निष्पापा मनुजास्सर्वे लभन्ते गतिमीप्सिताम्।
कार्यद्वयं समुद्दिश्य कृष्णवेणी भवाम्यहम्॥
जगतां रक्षणार्थाय मद्भक्तानां च मुक्तये।

"கிருஷ்ணா நதியை ஸ்மரித்தும், பானம் செய்தும், அதில் ஸ்னானம், ஸ்தோத்திரங்கள் செய்தும் ஜனங்கள் ஸத்கதியினை அடைவர். இரண்டு காரியங்களுக்காக நானே கிருஷ்ணவேணீ நதியாக ஆகிறேன். ஒன்று, ஜகத்தினைக் காக்க; இரண்டாவது, என் பக்தர்களுக்கு ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அளிக்க." யோக மார்க்கம் மிகக்கடினமானது. கிருஷ்ணாநதியில் நானே பிரவேசித்திருப்பதனால், ஸ்னான, பானாதிகள் மூலம் ஜனங்கள் சுலபமாக அரிய ஞானத்தைப்பெற்று ஸத்கதி அடைவர் என்றார்.

இவ்வாறு கூறிய விஷ்ணு, தானே திவ்வியமான ஒரு பெண்ணை ஸ்ருஷ்டித்தார். அப்பெண், நான்கு கைகளுடன், பீதாம்பரம், விஷ்ணு சின்னங்கள், கரிய நிறம், சந்திர சோபையுடன், தேஜஸே உருக்கொண்டதுபோல் காட்சியளித்தாள். அவள்தான் கிருஷ்ணா. பிரம்மா அவளைத் தன் பெண்ணாக ஏற்று, அவளை ஸ்பரிசித்தே பல தீர்த்தங்களை உண்டுபண்ணினார். கிருஷ்ணாவானவள் பின்னர் பிரம்மலோகத்திலிருந்து கிளம்பி, நதி ரூபமாக பூலோகம் வந்தடைந்தாள். இந்த கிருஷ்ணாநதியே கற்பகக்கொடி, காமதேனு போல் ஸகல இஷ்டங்களையும் பூர்த்தி செய்து, எல்லா தர்மங்கள், மோக்ஷம் இவைகளை வழங்குகிறாள்.

ரிஷிகளின் பிரார்த்தனைக்கிணங்க, ஶ்ரீகிருஷ்ணவேணீ மாஹாத்மியத்தை நாரதர் விளக்கத் தொடங்கினார். இம்மாஹாத்மியத்தை சிரவணம் செய்தலே, கலிதோஷத்தைப்போக்கி, முக்தியையல்லவா அளித்துவிடும். இம்மாஹாத்மியமோ, முன்பு ஸ்வயம் ஶ்ரீபரமேஶ்வரனே, ஸ்கந்தனுக்கு உபதேசித்ததாகும். சிரத்தையுடன் சிரவணம் செய்தால், இது விஷ்ணுவிடமும், சிவனிடமும் சிறந்த பக்தியை நல்கும்.

ஒரு சமயம் சிவபெருமானைத் தரிசிக்க ஸுப்பிரமணிய ஸ்வாமியானவர், முனிவர்கள் புடைசூழ, கைலாஸம் வந்து சேர்ந்தார். அப்பொது அவர் ஆறு அங்கங்களைக் கொண்ட வேதமானது மூர்த்தீகரித்து, புராணங்கள் சூழ வந்ததுபோலிருந்தது. அவர் பரமேஶ்வரனை வெகுவாக ஸ்தோத்திரம் செய்து, கிருஷ்ணா நதி மாஹாத்மியத்தை உபதேசிக்குமாறு பிரார்த்தித்தார். சிவன் கூறினார்: ஒருதடவை ஶ்ரீவிஷ்ணுவின் பாதஸ்பர்சத்தினாலேயே, கங்கையானது, ஸ்மரித்தாலேயே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லதாக ஆயிற்றே. கிருஷ்ணாவோ விஷ்ணுவின் சரீரமேயாகும்.
सर्वंकर्षति चाघौघं तेन कृष्णा प्रकीर्तिता॥

"எல்லா பாபங்களையும் ஆகர்ஷணம் செய்து, போக்குபவளாக இருப்பதினால், அவள் கிருஷ்ணா என்று போற்றப்படுகிறாள்." கிருஷ்ணாவின் மாஹாத்மியத்தைச் சொல்ல, ஒரு கல்பகாலங்கூடப் போதாது என்பதனால், சுருக்கமாகச் சொல்கிறேன் என்றார்.

கிருஷ்ணாநதி உத்பத்தி வைபவம்
கிருதயுகத்தின் ஆரம்பத்தில் எல்லா ஜனங்களும் புண்ணியவான்களாகவும், ஆனந்தமிக்கவர்களாகவும் இருந்தனர். காலப்போக்கில் பாபங்கள் ஸம்பவிக்க, ஜனங்களை நல்வழிப்படுத்த கல்பவிருக்ஷங்கள் பிரம்மாவின் அனுக்கிரஹத்தினால் பூமியில் தோன்றின. பாபங்கள் மிகவே, அவை மறைந்தன. பின்னர் விசேஷ ஓஷதிகளை பிரம்மா பூமியில் உண்டுபண்ணினார். அவைகளும் பாபச் சூழ்நிலையில் மறைந்தன. பிரம்மா அப்போது மழை, தர்மம், அதர்மம் இவற்றின் நிலை ஆகியவற்றை ஸ்தாபித்தார். தர்மதேவரே நான்கு ஸ்வரூபங்களாக அவதரித்தார்- நரர், நாராயணர், ஹரி, கிருஷ்ணர் என்று. பூமியில் பாபமிகுதியைக் கண்டு துக்கித்த அவர்கள், கிருஷ்ணரை பிரம்மலோகத்திற்குச் சென்று, கிருஷ்ணா நதியை உடனே பூமிக்குக் கொணருமாறும், பிரம்மாவிடம் சொல்லி மற்றும் பல புண்ணியதீர்த்தங்களை பூமியில் ஸ்ருஷ்டிக்கும்படி செய்யுமாறும் சொன்னார்கள். அவ்வாறே கிருஷ்ணரும் செய்ய, பிரம்மலோகத்திலிருந்து கிருஷ்ணா கிளம்பிவருகையில், அவளைப் பின்தொடர்ந்து பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள், ரிஷிகள் எல்லோரும் வந்தனர். பூமியில் கிருஷ்ணா வாசம் செய்யத்தகுந்த இடத்தைப்பற்றி அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், ஒரு தபஸ்வி எதிர்ப்பட்டார். தங்கள் ஆசை என்னவென்று அவரிடம் கேட்டனர். அவரோ, கிருஷ்ணா நதியை ஸஹ்யாத்ரி மலையில் அவதரிக்கச் செய்யுமாறும், தான் அங்கு ஸ்னானம் செய்து ஸத்கதி அடைய விரும்புவதாகவும் பிரார்த்தித்தார். கிருஷ்ணா நதி தீர்த்தமாதாவாக லோகத்தில் விளங்கவேண்டுமென்று ஆசையை விண்ணப்பித்தார். ஸஹ்யாத்ரிமலையும் வெகுவாகப் பிரார்த்திக்கவே, கிருஷ்ணா தேவி ஆசீர்வதித்து, தான் அங்கு அவதரித்து, பல புண்ணியநதிகள் மேன்மேலும் ஸஹ்யாத்ரியில் உண்டாகி, ஜனங்களுக்கு க்ஷேமத்தை நல்குவர் என்றாள். விஷ்ணு, நரர், நாராயணர், தேவர்கள், பதினான்கு புவனங்களும் ஸஹ்யமலையில் குழுமினர். அப்போது அங்கு மகோத்ஸவமாக இருந்தது. காமதேனுவே வந்ததாக எண்ணி, நதிக்கரையில் ஹோமங்கள், பூஜைகள், பித்ருகாரியங்கள் செய்து ஸத்கதியடைய எல்லோரும் விரும்பினர். ஸஹ்யாத்ரிமலையின் தேவர் மஹாபூஜை செய்து மகிழ்ந்தார். விஷ்ணு தானே வெண்மை நிறங்கொண்ட அச்வத்த (அரச) மரமாக ஆகி, அதன் அடியில் கிருஷ்ணா நதி உத்பத்தியானாள். ஆகாசத்திலிருந்து புஷ்பவிருஷ்டி, கந்தர்வ ஸங்கீதம், அப்ஸரஸ் நாட்டியம் எல்லாம் மஹோத்ஸவமாக ஆயிற்று. கிருஷ்ணாநதியின் பிரபாவத்தினால் தர்மம் செழித்தது; அதர்மம் ஒடுங்கிற்று.  ஶ்ரீ பரமேஸ்வரன் உபதேசித்த, இந்த கிருஷ்ணாநதி உத்பத்தி கதையைப் படித்தலே பெரும்புண்ணியம், இஹலோக சௌக்கியம், பரமபதத்தையும் கொடுக்கும்.

இதர தீர்த்தங்கள்
கிருஷ்ணாநதி சம்பத்தப்பட்ட பல தீர்த்தங்களைப் பற்றி ஸ்கந்த பகவான் பின்னர் நாரதாதி முனிவர்களுக்கு உபதேசித்ததை நாரதர் இப்போது கூறலானார்.

கிருஷ்ணாநதி உத்பத்தியாகும் இடத்திலுள்ள அரச மர அருகில் விஷ்ணுதீர்த்தம் உள்ளது. அமாவாசை, வியாழக்கிழமையில் அங்கு ஸ்னானம் செய்தல் முக்தியையே வழங்கும். அருகிலேயே பிரம்மதீர்த்தம், ருத்ரதீர்த்தம் ஆகியவைகளும் இருக்கின்றன. அங்கு ஸ்னானம் செய்தால் ஒரு கல்பகாலம் ருத்ரர், பிரம்மாவின் அடிகளில் வசிக்கலாம். ஸஹ்யாத்ரியின் வடக்கில் பிரம்மகிரி என்ற சிகரம் உள்ளது. பிரம்மா இங்கு தபஸ் செய்து விஷ்ணு பதவியை அடைந்தார். தெற்கிலுள்ள வேதகிரியில் வேதங்கள் மூர்த்தீகரித்து அங்கங்களுடன் வசிக்கிறார்கள். நடுவில் ஒரு நெல்லிமரம் உள்ளது. அதனடியிலிருந்து வேணீ என்கிற மகாநதி உத்பத்தியாகிறது. கிருஷ்ணாநதி வேணீ நதியுடன் ஸங்கமமாகும் புண்ணியஸ்தானமும் அருகிலேயே உள்ளது. இங்கு ஸ்னானம் செய்து வருண ஜபமோ, 800 தடவை காயத்ரி ஜபமோ செய்தால் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். அது போலவே விஹங்க தீர்த்தத்தில் சிவ ஸாந்நித்தியத்தில் கருடன் தபஸ் செய்து எல்லா இஷ்டங்களையும் அடைந்தார். ஸித்தக்ஷேத்ரத்தில் பைரவர் தரிசனம் தருகிறார். அங்கு கிருஷ்ணா நதியில் ஸ்னானம் செய்தல் பரமபதத்தைக் கொடுக்கும். நாகேஸ்வரர் தரிசனம் தரும் இடத்தில் மலாபஹார தீர்த்தத்தில் ஸ்னானம் செய்தல் எல்லா ஸித்திகளையும் அளிக்கும். இதேபோல கும்பேஸ்வர தீர்த்தம், பௌலஸ்த்யதீர்த்தம் இவைகளும் மிகவிசேஷமானவை.

இவற்றின் கீழ்பாகத்தில் மார்கண்டேயரால் உபாஸிக்கப்பட்ட தீர்த்தம் உளது. மார்கண்டேயர் கிருஷ்ணா நதிதேவதையை மிக அழகாக ஸ்தோத்திரம் செய்தார். விஷ்ணுவின் சரீரமே நதியாக ஜகத்கல்யாணத்திற்காக ஆவிர்பவித்து எல்லோரையும் அனுக்ரகிப்பதைச் சொல்லி, அவளே கௌரி, லக்ஷ்மி, ஸரஸ்வதிரூபமாக, தக்ஷிணகங்கையாக இருக்கிறாளென்றார். தேவி நேரில் தரிசனம் தந்து, வரம் வேண்டுமாறு சொன்னபோது, மார்கண்டேயர் தனக்கு நீண்ட ஆயுளை விஷ்ணு பகவான் அனுக்ரகித்திருப்பதைக் கூறி, பகவத்பக்தியில்லாமல் நீண்ட ஆயுஸ் வீணே; அதனால் ஆத்மஸ்வரூபம், சிவன், விஷ்ணு, ப்ரபஞ்சரூபமாகிய அம்பாள் ஆகியோரிடம் த்ருடபக்தியைப் பிரார்த்தித்தார். கிருஷ்ணாதேவியும் அவருக்கு அந்த அனுக்ரகத்தைச் செய்து, மேலும் யார்யாரெல்லாம் தேவியிடம் பிரார்த்தித்து ஸ்னானம் செய்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் தீர்க்காயுஸ், த்ருடபக்தியைப் பெறுவார்கள் என்று அருளினாள். சிவன் மார்கண்டேயேஸ்வரராக அருளும் அந்த தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து முக்தியையே பெறலாம். அதன்பிறகு, விசாலம் முதலிய ஐந்து நதிகள் கிருஷ்ணாவை தரிசனம் செய்ய வந்தபோது, தேவர்களும் அங்கே வந்து குழுமினர். சிவன் அங்கு எல்லோருக்கும் முக்தியளிக்கிறார்.

குப்ஜேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, குப்ஜேஸ்வர சிவனைத் தரிசித்தால் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகம் அடையலாம். அதன் கிழக்கில் மகாதீர்த்தத்தில் கருப்பு எள் வெண்மையாக மாறும்; அங்கு பக்தியுடன் ஸ்னானம் செய்தால் தேவர்களை ப்ரத்தியக்ஷமாகப் பார்க்கலாம். நதீஸங்கமக்ஷேத்ரத்தில் ஒரு மாதம் ஸ்னானம் செய்து, பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ’அகஹாரி’ என்கிற ஸங்கமத்தில் ஸ்னானம் இரு தடவை செய்து, காயத்ரி மந்திரத்தை லக்ஷம் தடவை ஜபித்தால் இஷ்டப்ராப்தியுடன், முக்தியும் கைகூடும். ஸப்தஸாகரஸங்க தீர்த்தத்தில், ஏழு ஸமுத்திரங்களும் கிருஷ்ணா தேவியை தரிசித்த இடமாகையால், அங்கு ஸ்னானமானது ஸப்தஸாகர ஸ்னான பலனை அளிக்கும். கௌசிகீ நதி கிருஷ்ணாவுடன் சேருமிடம், கௌசிக முனிவர் (விச்வாமித்ரர்) கடும் தபஸ் செய்த இடம்; முக்தியை சீக்கிரமாகவே நல்குமிடம். ஸப்தகுலோத்தாரம் என்று ஸ்கந்தப்பெருமானாலேயே வர்ணிக்கப்பட்ட தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, அங்கு எழுந்தருளியுள்ள சிவனைத்தரிசித்தால், முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகள் ஸத்கதியடைவர். அதன் கிழக்கில் குலதாரகம், பாரதம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. அதனருகில் முனிவர்கள் வந்தபோது ஒருசமயம் கிருஷ்ணா நதி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடவே, அம்முனிவர்கள் தேவியை வெகுவாக ஸ்தோத்திரம் செய்தனர்.

हंसा न केवलममी जलकांक्षिण-
स्त्वामायान्ति दूरगहनाद्भुवि तोयकामा:।
आयान्त्यहो परमहंस वराश्चदेवि
त्यक्तस्पृहा अपि सुखादिषु मोक्षकामा:॥

"ஹம்ஸபக்ஷிகள் உன் நீரை அனுபவிப்பதற்கு தூரதேசத்திலிருந்து வருவதோடல்லாமல், எல்லாம்துறந்த பரமஹம்ஸ முனிவர்களும் மோக்ஷத்தையே விரும்பி இங்கு உன்னைச் சரணடைந்துள்ளனர்." தேவர், அசுரர், மனிதர்கள் எல்லோரும் பலப்பல ஆசைகளைச்சுமந்து இங்கு வந்துள்ளனர். நீயே எல்லோருக்கும் தாயார்.
தேவி அவர்களுடைய பக்தியை மெச்சி, ஜலமத்தியிலிருந்து தரிசனம் தந்தாள். சங்கம், சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைத் தாங்கி, மனோகர ரூபத்துடன் காட்சியளித்தாள். முனிவர்களுடைய பூஜையை ஏற்று, தேவி சந்தோஷத்துடன் நதியின் இரு பாகங்களாகத் தன்னை ஆக்கிக்கொண்டாள். ஒன்று, மதுபரம்; மற்றது, தேவஹ்ரதம் என்ற பெயருடன் முக்தி மார்கங்களாக விளங்கின. மற்றும், கிழக்கில், கங்கர் என்ற முனிவர் தபஸ் செய்த கங்கதீர்த்தம், சூர்பாரகதீர்த்தம், ஜம்புதீர்த்தம், க்ரௌஞ்ச முனிவர் ஸித்தியடைந்த க்ரௌஞ்ச தீர்த்தம், யக்ஞவாடம் ஆகிய புண்ணியதீர்த்தங்கள் உள்ளன.

எல்லா பாபங்களையும் போக்கி, முக்தியளிக்கவல்ல, உத்தமமான ஸர்வஸித்திதீர்த்தத்தில், சிவன், பார்வதி, வினாயகர், ஷண்முகர் எல்லோரும் தரிசனமளிக்கின்றனர். அதன்பின் ஆதித்யஹ்ருதயம் என்கிற தீர்த்தம், அஷ்டகை ஸங்கமஸ்தானம், வால்மீகதீர்த்தம் உள்ளன. ஸித்திஹ்ரதம் என்கிற தீர்த்தத்தில், ஜனகர் லக்ஷ்மியை உபாஸித்து, ஸீதையை புத்திரியாகப் பெற்றார். கிழக்கே செல்லச்செல்ல, மேலும் பல தீர்த்தங்கள்  பக்தர்களுக்கு அனுக்ரகம் செய்கின்றன. முத்கலம், ஸ்கந்தபுரம் முதலான கோடிக்கணக்கான தீர்த்தங்கள் தேவியின் கிருபையைப் பறைசாற்றுகின்றன.

பதின்மூன்று தீர்த்தங்கள்
கிருஷ்ணாநதியின் தென்கரையில், மூன்று யோஜனை (40 கிலோமீ.) தூரத்திற்குள், 13 தீர்த்தங்கள் மிக்க சக்திவாய்ந்தவை. அவைகளில் வரிசைக்ரமமாக ஸ்னானம் செய்தால், எல்லா காமனைகளும் பூர்த்தியாகும். எதிர்வரிசையாக ஸ்னானம் செய்தால், ஜீவன்முக்தியே கைகூடும். தேவர்கள், பித்ருக்கள் சந்தோஷமடைவர். இந்த தீர்த்தங்களின் பெருமையைக்கூறும் கதையொன்று உண்டு. ஸுமதி என்ற பிராம்மணோத்தமனுக்கு குழந்தை பிறந்தபோது, ஒரு ராக்ஷஸி அக்குழந்தையை அபகரித்துச் சென்றாள். ஒரு தபஸ்வியைப் பார்த்து பயந்துபோய், அவள் குழந்தையை வழியில் விட்டுவிட்டு ஓடினாள். துர்முகன் என்ற வேடன் அக்குழந்தையைக்கண்டு எடுத்துக்கொண்டுபோய் தன் வீட்டில் வளர்த்துவந்தான்.  பெரியவனானபின் ஒரு சமயம், திருடர்களால் கொல்லப்படவிருந்த ஒரு பிராம்மணரை அவன் காப்பாற்றினான். அவரோ கண்வ மகரிஷி. சந்தோஷப்பட்டு, ஞானத்ருஷ்டியினால் அந்த வேட்டுவப் பையனின் உண்மை வரலாற்றை அறிந்து ஆச்சரியப்பட்டு, மகரிஷி, அவனுக்கு பழைய ஞாபகம் வரும்படி அருளினார். தன் நிஜ வரலாற்றையறிந்து, தான் இப்போது வேடனாக இருப்பதை உணர்ந்து, துக்கத்திலாழ்ந்த அப்பையன் கண்வ மகரிஷியை, தனக்கு நல்வழி அனுக்ரகிக்குமாறு பிரார்த்தித்தான். கண்வரும், வடக்கிலிருந்து தென்பிராந்தியம் வந்து கிருஷ்ணாநதி தீர்த்தங்களில் ஸ்னானம், ப்ராயச்சித்தம் செய்து புண்ணியப்பேற்றை அடையுமாறு கூறினார். அந்த பிராம்மண வேட்டுவச் சிறுவனும் அவ்வாறே வந்து, இந்த 13 தீர்த்தங்களிலும் வரிசைக்ரமமாகவும், எதிர் வரிசையாகவும் ஸ்னானம் செய்து, கடைசியில் சுக்லதீர்த்தத்திலும் நீராடி, ஸர்வ பாபங்களையும் போக்கிக்கொண்டான். புண்ணியவசத்தால் மனித சரீரத்துடனேயே அவன் வெண்விமானத்தில் மேலுலகம் சென்றான். பிரம்மலோகம் தாண்டி, விஷ்ணுலோகம் சென்றடைந்தான்.
இந்த தீர்த்தங்களில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

 

1. கோபாததீர்த்தம்
மேற்கில் முதலாக வரும் தீர்த்தம் இது. ஆயிரக்கணக்கான பசுமாடுகளின் பாத சின்னங்களைத் தாங்கி நிற்கும் இடமிது. காமதேனுவே இந்த தீர்த்தத்தின் பெருமையைப் பேசி அனுக்ரகித்திருக்கிறாள். இங்கு ஸ்னானம் செய்து, கோபாதேஸ்வர லிங்கத்தை உபாஸித்து, மூன்றுநாள் உபவாஸமிருந்து, கோவதப் பாபத்திலிருந்து விடுபடலாம். பசுவிடம் செய்த பாபங்களைத் தொலைக்கும் தீர்த்தம் இது. இங்கு சொல்லவேண்டிய மந்த்ரமிது.
नमो गोभ्य: श्रीमतीभ्यस्सैरभेयीभ्य एव च
नमो ब्रह्मप्रसूताभ्य: पुत्रीभ्योपि नमो नम:॥

இந்த மந்த்ரத்தை தூரத்திலிருந்து கேட்டாலேயே கோதானபலன் கிட்டும். அவனுடைய க்ருகத்தில் பால், தயிர், நெய், தேன் இவைகள் ஸம்ருத்தியாக இருக்கும்.

2. அனந்ததீர்த்தம்
இங்கு அனந்தன் (ஆதிசேஷன்) தபஸ் செய்யவே, மகாவிஷ்ணு அவருக்கு தரிசனம் தந்து, கருடனிடமிருந்து அபயம் கொடுத்தார். தனக்குப் படுக்கையாகவும் ஆக்கிக்கொண்டார். சிவனையும் கூடவே அப்படுக்கையில் அமரும்படி பணித்தார். சிவன், விஷ்ணு இருவரும் சேர்ந்து அருட்காட்சி அளித்த இவ்விடத்தில் தேவர், ஸித்தர், கந்தர்வர் எல்லோரும் வந்து பெரிய உத்ஸவம் கொண்டாடினர். விஷ்ணு, அனந்தனின் பிரார்த்தனைக்கிணங்க, இத்தீர்த்தம் அனந்ததீர்த்தமெனப் புகழ் பெற்று, ஸ்னானம், தானம், ஜபம் முதலிய உபாஸனைகள் செய்பவருக்கு அனந்தமான பலன் கிட்டுமென்று அனுக்ரகித்தார். விஷ்ணு மேலும் சொன்னார்:

अनन्तस्त्वमनन्तोहमनन्तोयं सदाशिव:।
तीर्थानि देवा वेदाश्च सर्वेनन्ताः स्थिता इह॥

"நீ அனந்தன்; நானும் அனந்தன்; இந்த ஸதாசிவனும் அனந்தர்; அனந்தமாகவுள்ள தீர்த்தங்கள், தேவர், வேதங்கள் எல்லோரும் இங்கு நிரந்தரமாக இருப்பர்."

சிவனும் அவ்வாறே இங்கு ஸ்னானம் செய்து, பசுக்களை அர்ச்சித்தால், சிவலோகத்தில் கணங்களின் அதிபதியாக விளங்குவார்களென அருளினார். மற்ற தேவர்களுக்கும் அங்கு ஸாந்நித்தியம் ஏற்பட்டது. இப்போதும் ஹரிஹரமயமான லிங்கம் படத்துடன் கூடிய ஸர்ப்பத்துடன் இங்கு காட்சியளிக்கிறார். ஐந்து பஞ்சமிகளில் இந்த லிங்கத்தை பாலினால் அபிஷேகம் செய்து உபாஸித்தால், காமனைகள் பூர்த்தியாகி, பரமபதமே கிட்டும்.

3. ஸூர்யதீர்த்தம்
அனந்ததீர்த்தத்திற்குக் கிழக்கே, நைத்ருவ மகரிஷி தபஸ் செய்து, ஸூர்யதரிசனம் பெற்ற ஸூர்யதீர்த்தம் உள்ளது. ஸோமேஸ்வர சிவன் இங்கு லிங்கரூபமாக தரிசனமளிக்கிறார். நைத்ருவர் ஸூரியனைப்பற்றி செய்த ஸ்தோத்ரம் வெகு அழகாக உள்ளது. ஸ்தோத்ரத்தில் அவர் சொல்லுகிறார்:
ஸூரியனே, நீயே பிரம்மாண்டத்திற்கே தீபம்; பூமியிலிருந்து ரஸத்தைக் கிரகித்து, மழையாகப் பொழிந்து, தானியங்களை வளர்த்து, ஸகல லோகத்தையும் காப்பாற்றுகிறாய். சந்திரனையும் போஷித்து, சந்திரனின் அம்ருதகிரணங்களின்மூலம் தானியங்களுக்கு புஷ்டியை அருளுகிறாய்.  ஜனங்கள் கொடுக்கும் ஜல அஞ்சலிமூலம் நீ ஸகல சௌக்கியங்களையும் அனுக்ரகிக்கிறாய்.
நேரில் தரிசனம் தந்த ஸூரியனிடம், மகரிஷி ஸம்ஸாரமாகிற ரோகத்தைப் போக்கும் ஞானம், பக்தியை அருளப் பிரார்த்தித்தார். ஸூரியனும் அவ்வாறே அருளி, மேலும் நைத்ருவமகரிஷி அருளிய ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவருக்கும் அந்த பலன் உண்டு என்றார். இந்தஸூர்யதீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, ஸோமேஸ்வரரையும் ஸூரியனையும் உபாஸிப்பவர்களுக்கு எல்லா காமனைகளும் ஸித்திக்கும் என்றும் அனுக்ரகித்தார். இத்தீர்த்தத்தில் மந்த்ரங்களை புரஸ்சரணம் செய்து ஸித்திபெறுதல், பித்ருபூஜை எல்லாம் விசேஷமாக நடைபெறுகின்றன.

4. ஸப்தகோடிதீர்த்தம்
விஷ்ணு பகவானே எழுந்தருளிய இவ்விடத்தில், சங்க, சக்ர அடையாளங்களுடன் பாறை உள்ளது. ஏழுகோடி தீர்த்தங்களும் வசிக்கும் இத்தீர்த்தம், மலங்களைப் போக்கும் ஸங்கமதீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இங்கு செய்யும், தானம், ச்ராத்தம், ஜபம் முதலிய எல்லாமே கோடிபங்கு பலனைத் தரும்.

5. சக்ரதீர்த்தம்
ஒருசமயம் அம்பரீஷ மகாராஜா மகாவிஷ்ணுவை எந்த தீர்த்தம் சீக்கிரத்தில் ஞானத்தைக் கொடுக்குமென்று கேட்க, விஷ்ணுவும் சுதர்சன சக்ரத்தைப் பின்பற்றிப் போகுமாறும், சக்ரம் எந்த தீர்த்தத்தைக் காண்பிக்கிறாரோ, அதுவே உகந்த தீர்த்தம் என்றார். சக்ரம் காட்டிய சக்ரதீர்த்தத்தில் ராஜா வெகு காலம் இருந்தார். காத்தியாயனி தேவி இங்கு ஸாந்நித்தியம் கொண்டிருக்கிறாள். சக்ரதீர்த்த ஸ்னானம் உயர்ந்த ஞானத்தைக் கொடுக்கும்.

6. சங்கதீர்த்தம்
ஶ்ரீபரமேஸ்வரன் தன்னுடைய க்ஷேத்ரம் என்று கொண்டாடிய ஸ்தலம் இது. பஞ்சலிங்கங்களை இங்கு உபாஸிக்கலாம். ருத்ரபாதங்களிரண்டையும் இங்கு தரிசிக்கலாம். எல்லா பாபநிவ்ருத்தியும், முக்தியும் கிட்டும். பித்ருபிண்டப்ரதானம் இங்கு விசேஷம்.

7. ருணாபாகரண தீர்த்தம்
ஸுப்ரமண்யஸ்வாமி ஒருசமயம் ஶ்ரீபரமேஸ்வரனைக் கேட்டார்: மனிதன் பிறக்கும்போது மூன்று கடன்களுடன் பிறக்கிறான் - தேவ, ரிஷி, பித்ரு கடன் என்று. தேவ கடனை யாகங்களினாலும், ரிஷி கடனை வேதாத்யயனத்தினாலும், பித்ருகடனை புத்ரர்கள் மூலம் ச்ராத்தாதிகளாலும் மனிதன் தீர்க்கவேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. பல காரணங்களினால் மனிதனுக்கு இக்கடன்களைச் சரிவர தீர்க்கமுடியாமல் போய்விடுகிறது. அவர்களுக்கு கதி என்ன.
சிவன் கூறினார்: கிருஷ்ணவேணி நதியின் இரு கரையிலும் மலாபஹாரிணி நதி கிருஷ்ணாவுடன் ஸங்கமமாகும் ஸ்தலத்தில் ஒரு யோஜனை தூரத்தில் இருக்கும் ருணாபாகரண (கடனை அகற்றும்) தீர்த்தம் முக்தியை அளிக்கவல்லது; எல்லா கடன்களையும் இல்லாமல் செய்யும்.
கிருஷ்ணவேணீ ஸ்னானம் வாஜபேய யக்ஞபலனைக் கொடுக்கும். ஸூரியன் கன்யாராசியில் (புரட்டாசி மாதம்) இருக்கும்போது செய்யும் ஸ்னானம் 60,000 வருஷங்கள் கங்கையில் ஸ்னானம் செய்த பலனைத்தரும். குருபகவான் கன்யாராசியில் இருக்கும்போது (புஷ்கரம் என்று விசேஷமாக இப்போது கொண்டாடப்படும் காலம்) செய்யும் ஸ்னானமானது ஏழுகோடி பாபங்களை அழிக்கும்; தன்னுடைய மூன்று கடன்கள் மாத்திரமல்லாது, மாதா பிதாக்களின் கடன்களையும் தீர்த்துக்கட்டும். ஸங்கமஸ்தலம் எல்லாவற்றிலும் பரம பவித்ரமானது.

தால்ப்ய ரிஷியின் கதை
ஒருசமயம் தால்ப்ய ரிஷியானவர் தன்னுடைய க்ருகத்தில் வந்த விருந்தினர் ஆகாரத்திற்காக, வேறொரு வீட்டில் காய்கறி கடன் வாங்கினார். காலக்ரமத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்க மறந்தேபோனார். இந்த பாபம் காரணமாக மறுபிறப்பில் அவர் நரியானார். பிறகு கழுகாகவும், மறுபடியும் நரியாகவும் அவருக்குப் பிறப்பு கிட்டியது. பழைய தபஸின் பலத்தினால் அவருக்கு பூர்வஜன்ம ஞாபகம் நன்றாக இருந்தது. விந்தியமலையில் கௌதம முனிவரைச் சந்தித்தபோது அவரிடம் தனது பாபநிவ்ருத்திக்கு வழியைப் பிரார்த்தித்தார். கௌதமர் தென்ப்ராந்தியத்தில் கிருஷ்ணவேணியில் ஸ்னானம் செய்து கடனையும் பாபத்தையும் போக்கிக்கொள்ளச் சொன்னார்.

 

தால்ப்யர் கிருஷ்ணவேணியில் எந்த ஸ்தலத்தில் ஸ்னானம் செய்வது விசேஷம் என்று வினவ, கௌதமர் மலாபஹாரிணிநதி கிருஷ்ணாவுடன் ஸங்கமிக்கும் ஸ்தலத்தைப் ப்ரசம்ஸை செய்து கூறினார். அங்கு ஸ்னானம் செய்து, சிவனை உபாஸித்தால், மிருகரூபம் அகன்று, பழைய மனிதரூபம் கிட்டும், மோக்ஷமே கைகூடும் என்றார். கிருஷ்ணவேணி நதியின் போக்கில் அடிக்கடி ஏராளமான தீர்த்தங்கள் இருக்கின்றன. அங்கு கொடுக்கப்படும் எள்ளளவு தானம் மேருமலையளவு பலனைக் கொடுக்கும். மற்ற இடத்தில் செய்த பாபம் ஸங்கமத்தில் ஒருக்ஷணத்தில் நசிக்கும். ஆனால் ஸங்கமத்தில் பாபம் செய்தால், அதை எங்குமே போக்கிக்கொள்ள முடியாது. ஸங்கமத்தில் ஸ்னானம் செய்து உயர்ந்த பதத்தில் இருப்பவர் அநேகர். பரதன், திலீபன், யயாதி, நஹுஷன், பகீரதன், ராமன், மாந்தாதா முதலியோர் அங்கு ஸ்னானம் செய்து, பக்தி, ஞானத்தில் நிகரற்ற பதத்தை அடைந்தனர் என்றெல்லாம் விளக்கினார்.

பரசுராமர் பாபநிவ்ருத்தி
பரசுராமர் க்ஷத்திரியர்களை 21 தடவை நிர்மூலமாக்கியபிறகு, அந்த பாபம் விலக பல தீர்த்தங்களுக்கு யாத்திரை செய்தார். பாபம் விலகாததால் சிரமப்பட்ட பரசுராமருக்கு ஸ்கந்தபகவான் மலாபஹாரிணி நதிக்கரையிலுள்ள பல தீர்த்தங்களைக் காட்டினார். கடைசியில் ஸங்கமத்தில் ஸ்னானம் செய்த பரசுராமரிடமிருந்து க்ஷத்ரஹத்தி பாபமானது மூர்த்திகரித்து  அவர் தேகத்திலிருந்து விலகியதை எல்லா ரிஷிகளும் தரிசித்தனர். மலாபஹாரிணி நதியை வெகுவாக ஸ்தோத்ரம் செய்தார் பரசுராமர். பாபநிவ்ருத்தியிலும் முக்தியளிப்பதிலும் இந்த ஸங்கமத்திற்கு  சமானமான தீர்த்தமில்லை என்றார்.